தினமும் காலையில் கடற்கரையில் நடந்தால் தொப்பை குறைந்துவிடும் என்று நம்பி கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன் .
தொப்பை குறைந்ததோ இல்லையோ ஒரு சிறந்த நட்பு வட்டம் உருவானது ...செல்லமாக எல்லோரும் சித்தப்பா என அழைக்கும் மோகன் சார்( மெட்ராஸ் யுனிவெர்சிட்டியில் கிளெர்க்), பெரியப்பா என அழைக்கும் பிரகாஷ் சார் (முன்னால் போலீஸ் அதிகாரி , தற்போது சிரிப்பு போலீஸ் )
பந்தா பார்ட்டி என அழைக்கும் கருப்புசாமி ( பக்கத்தில் வீடு இருந்தாலும் காரிலே வரும் காரணத்தாலும் , எந்நேரமும் கருப்பு கண்ணாடி போட்டு கொண்டு இருப்பதாலும் ) , நவீன் என்கிற ஷேர் மார்க்கெட் புரோக்கர் ( கொஞ்சம் டீசண்டாக கன்சல்டன்ட் என சொல்லலாம் ), மற்றும் ஐந்து , ஆறு பேர் கொண்ட குருப்பாக சேர்ந்து விட்டோம் .எல்லோரும் காலை சரியாக 5 .30 மணிக்கு வரவேண்டும் என்பது எங்களுக்குள் பேச்சு ...
போனவாரம் திங்கட்க்கிழமை நான் கொஞ்சம் முன்னதாகவே போய்விட்டேன் ..
பின்னாளில் யோசித்து பார்த்த போது அன்றைய தினம் அப்படி நடந்திருக்க கூடாது என தோன்றியது ...
அந்த ஒரு நாளின் பாதிப்பு அந்த வாரம் முழுவதும் யாருடைய கண்ணையும் பார்த்து பேசவில்லை ...என்ன பேசினாலும் சிரித்தாலும் தலைகுனிந்து மட்டுமே செய்தேன் ...
அப்படி என்னதான் நடந்தது அன்று ..
ஒரு சின்ன பிளாஸ்பேக் :
(தேவைபடுபவர்கள் ஒரு கொசுவர்த்தி எடுத்து முன்னால் வைத்து சுற்றுங்கள் அல்லது தலையை ஒரு பக்கமாக தூக்கி கொண்டு வானத்தை பாருங்கள் )
திங்கட்கிழமை : முதல் நாள் இரவு படித்த ஒரு மொக்கை பிளாக் (Blog ) ( பெயர் குறிப்பிட ஆசையுண்டு - விருப்பமில்லை) காலை 4 மணிக்கு கனவில் வந்து கலவரபடுத்தி எழுப்பி விட்டது .. மறுபடியும் தூங்க முயற்சித்து கனவு கண்டினியு ஆகிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து அப்போதே கிளம்பி பீச்சிற்கு சென்று விட்டேன் .. அந்த நேரத்தில் யாரும் இல்லாத காரணத்தால் கொஞ்சம் யோகா செய்து பார்க்கலாம் என்று தோன்றியது ..
மெதுவாக சென்று கடற்கரை மணலில் அமர்ந்தேன் ..
முதலில் மூச்சு பயிற்சி செய்யலாம் என சம்மணமிட்டு கைகளை எப்படி வைக்க வேண்டும் என தெரியாமல் நெஞ்சின் குறுக்கே கட்டி கொண்டேன் . அது சரியான பொசிசனாக இல்லாததால் கைகளை கீழே வைத்தேன் அப்பொழுது எதுவோ வட்ட வடிமாக என் கைகளில் பட்டது ,, சிப்பியாக இருக்கும் என நினைத்து எடுத்து பார்த்தேன் ஆனால் அது அழகிய புதிய மாடல் ஐந்து ரூபாய் நாணயம் அன்றைய எனது பொருளாதார நிலைமைக்கு இந்த ஐந்து ரூபாய் ஒரு பெரிய சந்தோசமே.
காலையில் அதிர்ஷ்டம் என நினைத்து எடுத்து பத்திரமாக பாக்கெட்டில் போட்டு கொண்டேன் , மறுபடியும் மூச்சு பயிற்சி செய்யலாம் என கண்களை மூடி கால்களை சரியாய் வைத்துகொண்டு கைகளை எங்கே வைப்பது என தெரியாமல் ஆனால் தெரிந்தே மணலில் வைத்தேன் ஒருவேளை இன்னொரு ஐந்து ரூபாய் கிடைக்குமா என்று !!!!!!
யாரோ என் பெயர் சொல்லி கூப்பிடுவது போல இருந்தது , திரும்பி பார்த்தேன் , புரோக்கரும் ஸாரி கன்சல்டன்ட்டும் , மற்றொரு நண்பரும் தூரத்தில் நின்று கொண்டிருந்தனர் ,, எழுந்து செல்லும்பொழுது கொஞ்சம் திரும்பி நான் அமர்ந்திருந்த இடத்தின் அட்சயரேகையும் , தீர்க்கரேகையும் மனதிலே குறித்துக்கொண்டு அவர்களை நெருங்கி காலை வணக்கத்தை சென்னை முறையில் சொன்னேன் .
என்னால் அன்றைய தினம் அவர்களுடன் இயல்பாய் இருக்க முடியவில்லை,கடற்கரை மணல் வெளி முழுவதும் பணம் புதைந்து இருபது போல் ஒரு உணர்வு. மற்றவர்களுடன் என்னால் இயல்பாய் ஒன்ற முடியவில்லை.நடந்து கொண்டு இருக்கும்போதே மோகன் திடீர் என்று கீழே குனிந்து ஏதோ ஒன்றை எடுத்தார் ,எல்லாரும் ஆச்சர்யமாய் பார்த்தால் அது ஒரு பழைய பத்து ருபாய் நோட்டு, எனக்கு திடீரென்று மோகன் மேல் ஒரு பொறாமை உணர்ச்சி தோன்றியது.
மனம் ஒரு நிலையில் இல்லை.பார்க்கிற எல்லா பொருள்களுமே நாணயங்களாகவும், பணமாகவும் தோன்றின, என்னால் நண்பர்களுடன் அன்று சேர முடியவில்லை.
என்னுடைய இந்த நிலைமை உங்களுக்கு வித்தியாசமாக தோன்றலாம்,ஆனால் இது உங்கள் எல்லாருக்குமே வரக்கூடிய ஒன்று தான்.
அப்பொழுது தூரத்தில் ஒருத்தரை பார்த்தேன் ...........
இப்பொழுது நான் ஒரு முக்கியமான நபரை அறிமுகபடுத்தபோகிறேன் ,,
அவர் பெயர் - தெரியாது
அவர் ஏரியா - தெரியாது
அவர் தொழில் - தெரியாது
அவரை பற்றி கொஞ்சம் கூட தெரியாது ஆனால் அவர் தினமும் எங்கள் எல்லோருக்கும் ஒரு காலை வணக்கத்தை ஆங்கிலத்தில் கண்டிப்பாய் தந்து விடுவர் ,, வந்த புதிதில் எனக்கு அவரை பற்றி ஆச்சர்யமாகவே இருந்தது ஆனால் காலப்போக்கில் பழகி விட்டது . அவர் தெரிந்தவர் தெரியாதவர் என எல்லோருக்குமே குட் மார்னிங் சொல்லிகொண்டே செல்கிறவர் , அவர்முன் ஒரு குழந்தை தனியாக சென்றால் உடனே அதன் அப்பா அம்மாவை கடிந்து கொள்வர் ,, யாரேனும் எதாவது சாப்பிட்டுவிட்டு பேப்பரை கீழே போட்டால் உடனே திட்டி அதை அவரை எடுக்க விடாமல் இவரே எடுத்து சென்று குப்பை தொட்டியில் போடுவார் , , அவர்களே எடுத்தால் அடுத்த முறை மறந்து விடுவார்களாம் ஆனால் இவர் எடுத்து போட்டால் அவர்கள் மறக்க மாட்டார்கள் என நினைத்தார் .
அந்த பெயர் தெரியாத நண்பர்தான் ( இன்று கண்டிப்பாய் அவர் பெயர் கேட்க வேண்டும் ) இப்போது தூரத்தில் வந்துகொண்டிருப்பது .. நான் நண்பர்களுடன் பேசிகொண்டே நடந்து கொண்டிருந்தேன் ..
அப்போது என் நண்பர் கூட வந்திருந்த மற்றொரு நண்பர் ஒரு பேமஸ் எழுத்தாளரை தேவை இல்லாமல் குறைகூறி கொண்டு வந்தார் எனவே நான் பேச்சை கவனிக்காமல் கடல் இருந்த திசையில் பார்த்துகொண்டே நடந்தேன் ,, பின்னர் என்னையும் அறியாமல் என் கண் மண் பார்த்தது (கவித கவித) .
திடிரென்று ஒரு கை என் தோளில் விழுந்தது , பார்த்தல் நம் குட் மார்னிங் நண்பர் ,
வாட் ஹேப்பன்ட் டூ யு ?
நத்திங் ஸார் ?
தென் ஒய் டோன்ட் யு சே குட் மார்னிங்?
ஸாரி ஸார் ஐ டிட்டின்ட் நோட்டிஸ் யு ...
வாட் ஆர் யு லூகிங் இன் கிரௌண்ட் , ஆர் யு மிஸ்ஸிங் எனிதிங்?
நோ ஸார்..
ஓகே தென் நௌ சே குட் மார்னிங்..
குட் மார்னிங் ஸார் :-)
அவருடைய ட்ரேட்மர்க் புன்னகையுடன் சென்று விட்டார் ,, அடடா இந்த தடவையும் பெயரை கேக்கலையே ....
செவ்வாய் கிழமை
இன்று எந்த ப்ளாக்கும் கனவில் வந்து கஷ்டப்படுத்தாமலேயே நாலரை மணிக்கு முழித்து (விழித்து மருவி முழித்து ஆகிவிட்டது) விட்டேன் நேற்றைய பழக்கமோ ?
சரி என்று இன்றும் கிளம்பி கடற்கரைக்கு சென்றுவிட்டேன் , மீண்டும் அதே அட்சயரேகையும் , தீர்க்கரேகையும் சேருமிடத்தில் சென்று அமர்ந்து இருட்டில் குருட்டு பூனையாய் மணல் சலித்தேன் ..
எதேட்சையாக திரும்பி பார்த்தால் நம் பெயர் தெரியாத நண்பர் சற்று தூரத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தார் .
நான் மெதுவாக எந்திரித்து சென்று அவர் அருகில் அமர்ந்து குட் மார்னிங் என்று சொன்னேன் , அவர் எந்த பதிலும் சொல்லவில்லை ,,
சிறிது நேரம் கழித்து திரும்பி பார்த்து குட் மார்னிங் சொல்லிவிட்டு உடனே ஸாரியும் சொன்னார் ..
அவர் மூச்சை அடக்கி வாயில் நுழையாத ஏதோ ஒரு ஆசனத்தின் பெயரை செய்வதாக சொன்னார் . அப்போது பேச கூடாதாம் . அவர் இதை சொல்லி கொண்டிருக்கும் போதும் என்னையும் அறியாமல் என் கைகள் மண்ணில் எதையோ தேடிக்கொண்டிருந்தது ..
நான் மெதுவாக கேட்டேன்
லெட் மீ நோ யுவர் குட் நேம் ஸார் .
ஒய் டூ யு வான்ட் டூ நோ மை நேம் ?
என்ன பதில் சொல்வது இதற்க்கு என புரியாமல் சும்மா என கூறினேன் ..
ஓ சும்மாவா ? குட் ஆன்ஸ்வர் .
ஓகே ஜென்டில்மேன் ஐ அம் கர்னல் ராஜ் ஐ அம் எ ரிடைர்ட் மிலிட்டரி மேன் ,, ஐ அண்ட் மை ஓயப் ஸ்டே இன் தட் ஹவுஸ் . என சொல்லி கடற்கரையின் ஓரமாய் தூரத்தில் தெரிந்த வீட்டை காண்பித்தார் ,,
அவரின் மகனும் மகளும் அமெரிக்காவில் இருக்கிறார்களாம்
(துட்டு பார்ட்டி போல , எதுக்கும் கொஞ்சம் காக்கா பிடிச்சு வச்சுக்கணும்
என மனதில் சாத்தான் வேதம் ஓதியது) .
பேச்சின்யிடையே அவர் அப்படியே பக்கத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் குட் மார்னிங் சொல்லிகொண்டே இருந்தார் அப்போதும் என் கைகள் மண்ணில் எதையோ தேடிக்கொண்டிருந்தது...
எங்கள் க்ரூபில் உள்ளவர்கள் வர ஆரம்பித்தார்கள் அதனால் பேச்சு அறுபட்டு வேற பக்கம் சென்றது ...
இப்படியே மேலும் இரண்டு நாட்கள் நடக்கும் போது கண்களாலும் , அமரும்போது கைகளாலும் தேடிக்கொண்டே நகர்ந்தது ..
வெள்ளிக்கிழமை
இன்றும் புதிய வழக்கம் போல நாலரை மணிக்கு எந்திரித்து கிளம்பி சென்றேன் ,, வழக்கமான அட்சயரேகையும் , தீர்க்கரேகையும் சேருமிடத்தில் ஒருவர் அமர்ந்து நிம்மதியாக காலைக்கடனை செலுத்தி கொண்டிருந்தார் ...........
தன்னிச்சையாக என் கைகள் என் பாக்கெட்டினுள் சென்றது அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்தேன் , ஏனோ என் கண்களுக்கு அது நாணயமாகவே தெரியவில்லை ,,,
வாயில் திடிரென்று உமிழ்நீர் அதிகமாக சுரக்க கீழே துப்பிவிட்டு அந்த நாணயத்தை தூக்கி கடலில் எறிந்தேன் ,, காரணமில்லாமல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து துப்பிகொண்டே இருந்தேன் ..
சற்று வேகமாக அந்த இடத்தை விட்டு நடக்க ஆரம்பித்தேன் மனதில் தேவையில்லாத சிந்தனைகள் வந்துகொண்டே இருந்தது
சிறிது நேரத்தில் நண்பர்கள் வர வர என் மனது சற்று மாறியது ,,
அன்று கிளம்பும்போது யோசித்தேன் இன்று என் கண்கள் தேவை இல்லாமல் கீழேயே பார்க்கவில்லை என் கைகள் மணலில் அளையவில்லை..
சனிக்கிழமை
இன்று பழைய வழக்கம் போல ஐந்து மணிக்கு எந்திரித்து ஐந்தரைக்கு சென்றேன் ,, சில நண்பர்கள் முன்னரே வந்து விட்டனர் ..
தூரத்தில் நம் கர்னல் ராஜ் வந்து கொண்டிருந்தார் ..
அவர் ஏன் அங்கு யாருக்கும் குட் மார்னிங் சொல்லாமல் கீழே பார்த்துக்கொண்டே வருகிறார் ?
*********************************************************************************
பின் குறிப்பு :
இது எனது முதல் சிறுகதை , உங்களது மேலான கமெண்ட்களை (comment )
பதிவு செய்தால் அது என்னை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் .
உங்கள்
G