அன்று சனிக்கிழமை ,, எனது ஆபிஸ் அரைநேரம் மட்டுமே ,, அதாவது 10௦ மணிக்கு சென்று 12 மணிக்கு கிளம்புவது ..
நான் ஊருக்கு செல்வதால் அன்று ஒரு மணிநேரம் பர்மிசன் ..
எக்மோர் தூரம் என்பதால் நான் வழக்கமாக தாம்பரம் சென்று ட்ரெயின் ஏறுவேன் ...
வைகை 12 .30 க்கு எக்மோரில் கிளம்பி 1 மணிக்குதான் தாம்பரம் வரும் ... நான் சரியாக 12 .45 க்கு சென்றுவிட்டேன் .வேகமாக வந்ததை சரிகட்ட ஒரு காபி குடிக்கலாமென வாங்கிகொண்டு ஒரு இடத்தில அமர்ந்தேன் ..
அருகில் ஒரு குரல் கேட்டது ..
பாட்டி டீ குடிக்கறயா ?
நீ குடி ராசா .. பாட்டி சொன்னாள்.
அவன் எந்திரிச்சு போய் ஒரு காப்பி வாங்கி கொண்டுவந்து பாட்டியிடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்தான் ..
நீ குடிடா ..
எனக்கு வேணாம் , நீ குடி ..
நான் எனக்கு வேணும்னு கேட்டேனா ?. நீதான வாங்கிட்டு வந்த .. நீயே குடி...
வேணாம் .. உன்கிட்ட சொல்லிட்டுதான வாங்கிட்டு வந்தேன் .. ஒழுங்கா குடி..
நான் பாட்டியினை பார்த்தேன் ..
ஏன் எல்லா பாட்டியின் முகங்களும் ஏதோ ஒன்றை இழந்தது போலவே இருக்கிறார்கள் ..
ஆனால் தாத்தாக்கள் அப்படி இருப்பதில்லையே ...எனக்கு என் பாட்டியின் நினைவு வந்தது ..
85 வயதுக்கு மேலே ஆகிறது ..இன்னமும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ஆண்டவனை கும்பிட்டுகொண்டு இருக்கிறார்கள் ...எனக்கு தெரிந்து மிக சிறிய எழுத்துக்கள் இருக்கும் புத்தகம் பைபிள் .. ஆனால் என் பாட்டி கண்ணாடி இல்லாமல் இன்னமும் பைபிள் படித்து கொண்டிருக்கிறார்கள் ...என் பாட்டியை பற்றி யோசிக்கும் போதெல்லாம் என்னுடைய நினைவுகளில் வருவது என் சிறு வயது நினைவுகள்தான் ..என் பாட்டி ஒரு என்டர்பிரிநுர் ... அதாவது சுய வேலைவாய்ப்பு .. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் பாட்டி கிறிஸ்த்துவ பள்ளிகூட வாசல் முன்பு முட்டாய் ஏவாரம் செய்பவர்கள் .. தினமும் காலையில் நாலு மணிக்கு முன்னாடியே எந்திரிச்சுடும்.. மண்டவெல்லத்தை பாகு காய்ச்சி அதில் ஜவ்வு முட்டாய் செய்ய ஆரம்பிக்கும் ..அந்த ஜவ்வு முட்டாயிற்கு அப்போதெல்லாம் நான் அடிமை ... அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும் .. பின் நானோ என் அண்ணனோ அதையும் மத்த எல்லாத்தையும் எடுத்துகிட்டு பள்ளிகூடத்துக்கு ஓடுவோம் ... அப்புறம் பாட்டி வர்றவரைக்கும் நாங்க ஏவாரம் பாத்துட்டு பாட்டி வந்தவொடனே நாங்க போய் கிளம்பி வருவோம் .. வாரவாரம் சந்தைக்கு போறது .. காதர் கடையில் பால்கோவவும் கல்லமிட்டையும் பொறி உருண்டையும் மொத்தமா வாங்கறது ...
ஆனா எங்க பாட்டியோட மறுபக்கம் ரொம்ப உக்கிரமா இருக்கும் ... நாராயணமூர்த்தி அன்னிக்கு நாமம் போட்டுக்கிட்டு நாலு வீட்டுல பிச்சை எடுக்கனும்னு பக்கத்து வீட்டுக்கு மட்டும் போக சொன்னப்ப... நானும் எங்க அண்ணனும் காசு அதிகமா கிடைக்கும்னு கடைவீதிக்கு போனப்ப வெளக்குமாறு எடுத்துக்கிட்டு ஊரு பூராம் சுத்தி சுத்தி அடிச்சதை இன்னும் மறக்க முடியல..
நினைவுகளில் இருந்து மீண்டு வந்தேன் .. இன்னமும் அந்த பாட்டியும் பேரனும் சண்டை போட்டுகொண்டிருந்தார்கள் ..
இப்ப நீ ஒழுங்கா வாய மூடிகிட்டு காப்பிய குடிச்சுட்டு வா ..ட்ரெயின் வந்துரும் ..
நம்ம பொட்டி கடைசீல இருக்கு ..
நீ குடிகலேன்னா எனக்கும் வேணாம் போடா..
இதுக்குதான் உன்கூட வரமாட்டேன்னு சொன்னேன் கேட்டியா.... எங்க போனாலும் ஏதாவது தொனதொனண்டு ...
நானா உன்னைய வரசொன்னேன் .. போய் உன் அம்மாகிட்ட கேளு ..
உன்னைய அனுப்பறத்துக்கு பதிலா ஒரு ஒலக்கைய கூட அனுப்புன்னு அவகிட்டதான் சொன்னனே..
இங்க பாரு ..கடைசியா கேக்குறேன் ..இப்ப நீ குடிக்க முடியுமா இல்ல குடிக்க முடியாதா..
நீ குடிச்சுட்டு கொடு நான் குடிக்கறேன் ..
எனக்கு வேணாம்
எனக்கும் வேணாம் ..
சரி ஓகே .. நான் டீய கீழ ஊத்திட்டு தம்ளர கொடுத்திட்டு வந்துறேன் ..
இங்கேயே உக்காந்துக்கிட்டுறு ..
டேய் .. டேய்.. காச போட்டு வாங்கி கீழ ஊத்தரானாமே .. கொண்டாடா இங்க .. காசோட அரும உனக்கு எங்க தெரியபோகுது ..எல்லாம் என் வயித்துல பிறந்தத சொல்லணும் ... அது சரியா இருந்தாதான உன்னைய சொல்லமுடியும் ...
வெற்றி புன்னைகையுடன் பேரன் டீயை பாட்டி கையிலே கொடுத்தான் ..
பாட்டி டீயை குடித்துகொண்டிருக்கும் போது சிறுவன் சொன்னான் ..
இனிமே என்னைய எங்கையாவது போறப்ப கூப்ட்டு பாரு.. அப்ப பேசிக்கறேன் ..
சீ நாயே .. நான் எதுக்கு உன்னைய போயி கூப்புடுறேன் .. நீ ஒரு உதவாகர ..
ஆமா நான் உதவகரதான் .. இனிமே ஜென்மத்துக்கும் உன்கூட வரமாட்டேன் ..
ட்ரெயின் வந்தது ..
நான் அவர்களுடைய பெட்டியை விட்டு ரொம்ப தூரம் .. அதனால வேகமா போய்ட்டேன் ..
மதுரைக்கு நைட்டு 8 மணிக்கு போய் சேர்ந்தோம் ...
ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து வெளிய வந்து பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு போனேன் ..
பஸ்சிற்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.. எனக்கு பின்னே
நீ சாப்பிடு ..
எனக்கு வேணாம் .. நீ சாப்பிடு ..
என் ராசல்ல .. ஆளுக்கு கொஞ்சம் சாப்புடுவோம் .. என்னால முழுசா சாப்புட முடியாதுப்பா...
பின்ன எதுக்கு கேட்ட ..
டேய் .. ஆசையா இருக்குதுன்னுதான் கேட்டேன் ... ஆனா முடியலையே ..
சேய்.. இதுக்குதான் நான் உன்கூட வர்றது இல்ல .. உன்னைய பேசாம தனியா ஏத்தி விட்டிருக்கணும் ..
ஆமா .. இந்த 80 வருசமா இவன்தான் கூட வந்தான் .. போடா பொசகெட்டபயலே . நான் இன்னும் எட்டு ஊருக்கு வேல பாப்பண்டா ..
என்னுடைய பஸ் வந்தது .. கிளம்பினேன்
ஆனால் ஒன்று .. கண்டிப்பாக இவர்களை மறுபடியும் ரயில்வே ஸ்டேஷனிலோ அல்லது பஸ் ஸ்டான்டிலோ பார்ப்பேன் என நினைத்துக்கொண்டே என் பாட்டியுடன் சண்டைபோட பஸ் ஏறினேன் ...